2 March 2016

கல்வி கரையில கற்பவர் நாள்சில,
 கடைசியா பார்த்தா ஒண்ணுமில்ல

"கல்வி கரையில கற்பவர் நாள்சில" என படித்தது மட்டும்தான் இங்க எல்லாருக்கும் ஞாபகமிருக்கு. சிலருக்கு அது நாலடியார் பாட்டு எனவும், பலருக்கு அதோட அர்த்தமும் ஞாபகம் இருக்கும். சுருங்கச்சொன்னா இதுதான் நம்ம கல்விமுறை. விளக்கிச்சொல்லனும்னா பின்வரும் பத்திகளை தொடரலாம்.

எழுத்தறிவு கல்வியறிவு கணக்கெடுப்புனு அருந்ததி நட்சத்திரம் பார்ப்பது போல அரசாங்கம் வருடாந்திரத்திற்கொருமுறையோ, ஐந்து வருடத்திற்கொருமுறையோ நடத்தும். பக்கத்து நாட்டுடனான பணி(னி)ப்போர், அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய வம்சாவளி மாணவர்கள், எதிர்கட்சிகளின் முன் கெத்து காட்ட என எதாவது ஒரு காரணத்திற்காக ஒவ்வொரு முறையும் சதவீதத்தில் குறைந்தபட்சம் 1% ஆவது உயர்த்தப்பட்டிருக்கும். அதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் எப்படியாவது இணைக்கப்பட்டிருக்கும். 


Literacy Rate of India As per 2011 Census



மார்கெட்டிங்கில் இருப்பவர்களுக்கு "TARGET" என ஒன்றை தந்து அதை அடைந்துவிடு என அதற்கான தேவைகள் தருவாங்க. ஆனா இங்கே "TARGET" உண்டு, தேவைகள் கிடைக்காது. மாறாக "TARGET" அடைந்த பின்பு, அதை அடைந்த விதம், அதற்கான செலவு என கணக்குப்போட்டு, தேவைகள் நிரப்பிக்கொள்ளப்படுகிறது.

தமிழ் நாட்டுல கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கையில குறைந்த சதவீதம் கொண்ட மாவட்டமா தருமபுரி இருந்தது, இருக்கு.
(https://results.reportbee.com/2014/tn/12/state_analysis/dharmapuri)
இந்த லிங்க்ல பார்த்தா தெரியும். குறைஞ்சபட்ச கல்வியறிவு இருந்த ஒரு மாவட்டம் தமிழ் நாட்டுல 17வது இடம் பிடிச்சிருக்கு. உயர்கல்வித்துறை அமைச்சரின் ஊராகிய பின்பு 2012ல் 24ல் இருந்து 2015ல் 17 இடம் வந்த அதிசயம் ஒரு பக்கம். நிஜமாகவே அங்க நல்லா படிச்சுதான் மார்க் வாங்கினாங்களா இல்ல வழக்கம் போல அருந்ததி நட்சத்திரம் பார்த்தாங்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஏன் ஆட்டுமந்தை கூட்டங்களை உருவாக்கும் நாமக்கல் பள்ளிக்கூடங்களும் "கல்வி மாவட்டம்" என பட்டம் வாங்கிவிட்டு இங்கே நடக்கும் கொடுமையெல்லாம் பார்த்துட்டு கடுப்பாகும்போது நவதுவாரங்களிலும் உஷ்ணம் அதிகாமாகும்.

ஆங்கிலப்பாடத்துல மிக முக்கியமான கேள்வி "Letter Writing". எதாச்சும் ஒரு கடுதாசி, மடல்னு எழுதியே ஆகனும். அதற்கென பயிற்சி பெற்று, ஆங்கிலத்துல 150 மதிப்பெண் எடுத்த மாணவனின் "Leave Letter" வரிகள் இதோ.

Sir,
I no come college. So i no inform. I sorry. Giv me parmissen, I go inside class.

இந்த மாணவன் 12வது தேர்ச்சி பெற காரணாமியிருந்த ஆசிரியன் ஒரு தேசத்துரோகி, அந்த வகுப்பின் மற்ற ஆசிரியர்களும் தேசத்துரோகிகள். காரணம் மொழிப்புலமைக்கான அந்த ஒரு மணி நேரத்தை கூட ஆடுகளை புழுக்கை போட தயார் செய்யவேண்டி, Physics, Chemistry, Maths என அழைத்துச்செல்வதும், எப்படியாவது பாஸ் போட்டாதான் ப்ரமோசன், என்பதும் அரசாங்க விதிமுறை. இல்லையென்றால் ஆயிரம் கேள்விகள் வரும். இப்படித்தான் இங்கே கல்வி அரங்கேறிக்கொண்டிருக்கிறது. பக்கத்து மாநிலத்துக்காரனிடம் நாங்களும் முன்னேறுகிறோம் என பெருமை பீற்ற பச்சை வாழை இலையில் சக்கரைப்பொங்கல் என சொல்லி மலம் அள்ளி தின்கிறனர் அதிகாரப்பிரியர்கள்.

மாணவர்களும் இதுதான் நமக்கான வாய்ப்பென பிச்சையெடுத்ததைக்கூட காலரை தூக்கிவிட்டு கெத்தென வாழ்கின்றனர். இங்கே கல்விமுறையில் மாற்றம் என்பது ஆதி முதல் அந்தம் வரை மாற வேண்டும், மாற்றம் உருவாக ஒவ்வொருவரும் தன்னை சுயமாக தயார் செய்துகொள்ள வேண்டும், இல்லனா, பொறியியல் படிச்சவன் வங்கியிலும், படிக்காதவன் பாராளுமன்றத்திலும் இருப்பது தொடர்ந்துகொண்டே இருக்கும்.